Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கைதிகளை விடுவிக்க சட்டம் தடையாக இருக்கின்றது என்பது உண்மையா?

மக்களின் உரிமைகளுக்கு எதிராக, சட்டம் பற்றி சிங்கள-தமிழ் இனவாத ஆட்சியாளர்களும், எதிர்கட்சித் தலைவர்களும் பேசுவதன் மூலம், தொடர்ந்து மக்களை ஒடுக்குவது நடந்தேறுகின்றது.

இதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அரசும், அரசியல்வாதிகளும் முன்னெடுப்பதான பிரமையை ஊட்டி; மக்களுக்கு எதிரான ஆட்சியையே "நல்லாட்சி" என்கின்றனர். அண்மையில் மக்கள் சார்ந்த இரண்டு விடையங்கள் மீது, சட்டத்தையும் பேசும் பொருளாக்கி இருக்கின்றனர்.

1. கைதிகள் விவகாரம்: சமவுரிமை இயக்கம் கைதிகளின் விடுதலையைக் கோரி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து சமகால அரசியல் விவகாரங்களில் ஒன்றாக மாறி இருக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி, அதை மீறியவர்கள், திடீரென சட்டம் குறித்து இன்று பேசுகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையை மறுக்கின்ற அரசும், அதை வைத்து இனவாத அரசியல் செய்யும் கட்சிகளும், தனிநபர்களும், கைதிகளின் விடுதலையை சட்டவிரோதமாகக் காட்டுவதும், தங்கள் சட்டபடியான ஆட்சியையும், அது சார்ந்த அரசியலையும் செய்வதாக காட்டிக்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர். போலி வாக்குறுதிகளின் மறுபக்கம் இந்தச் சட்டம்.

2. குமாரின் பிரஜாவுரிமை விவகாரம்: இலங்கை பிரஜையான குமார் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பதால், சட்டப்படி இலங்கைப் பிரஜாவுரிமையை கோர முடியாது என்று கூறி பிரஜாவுரிமையை மறுக்க சட்டத்தை கையில் எடுத்து அரசியலை நடத்துகின்றனர். மலையக மக்களின் பிரஜாவுரிமையை 1948-1949 சட்டம் மூலம் இல்லாததாக்கி அதை மறுப்பதற்கு சட்ட விவகாரமாக்கியது போன்று; நாட்டின் யுத்தம் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் நாட்டிலிருந்து வெளியேறியவர்கள், வாழ்ந்த நாடுகளில் பெற்ற பிரஜாவுரிமையை காட்டி, பிறப்பின் அடிப்படையிலான இலங்கைப் பிரஜாவுரிமையை மறுப்பது இன்று அரங்கேறுகின்றது. இதுதான் உலகளாவிய மனிவுரிமை மற்றும் பிரஜாவுரிமை கொள்கையா என்றால் இல்லை என்பதோடு, இலங்கையில் சட்ட அரசியல் பேசுகின்றவர்கள், மனிதவுரிமையை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். சட்டம் என்பது மக்களை ஒடுக்க இயற்றப்படுவதே ஒழிய, இயற்கையின் விதியின் பாலானதல்ல, மாற்ற முடியாததொன்றல்ல.

இங்கு இந்த இரண்டு விடையத்தையும் எடுத்தால், மனிவுரிமையை மீறுகின்ற சட்டங்களை கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது. எந்தக் கட்சியும், அரசியல்வாதிகளும் இந்த மனிதவிரோத சட்டத்தை நீக்கக்கோரி போராடாத வரை, மக்களுக்கு எதிராக சட்டத்தை முன்னிறுத்துகின்றவர்களாக இருக்கின்றனர். அதேநேரம் இவர்கள் நாட்டின் சட்டப்படியான ஆட்சியையும், அரசியலையும் முன்னெடுக்கின்றனரா எனில் இல்லை.

இலங்கையில் ஜனநாயகமும், சட்ட ஆட்சியும் நடக்கின்றதென்கின்ற பொய்யை, மனிதவுரிமைக்கு எதிரான சட்டங்கள் மூலம் சொல்ல முற்பட்டு இருக்கின்றனர். இந்த அடிப்படையில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இதன்பின் இங்கு இரண்டு விடையங்கள் முக்கியமானது.

1. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றதா?

2. சட்டம் யாருக்கானது? - அது மாற்றப்பட முடியாதா என்பது

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றதா?

தேர்தல் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும், அரசியலும், இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை மறுத்ததுதான் கடந்த வரலாறாகும். இன-மத-சாதி ரீதியாக நாட்டையும், மக்களையும் பிளவுபடுத்த, இனவாதம்-மதவாதம்-சாதியவாதம் மூலம் தங்கள் அரசியலைச் செய்தனர், செய்கின்றனர். இது மக்களுக்கு எதிரான சட்டவிரோதமானதாகும். மக்களைப் பிரித்து ஒடுக்குகின்ற சட்டவிரோத ஆட்சிகளையும், கொள்கைகளையும் முன்னெடுத்தவர்களை சட்டம் குற்றவாளியாக கண்டு இருக்கின்றதா?

இலங்கையில் இனவாதம்-மதவாதம்-சாதியவாதம் மூலம் நடந்த குற்றங்களுக்கு, சட்டம், நீதி என்ன செய்து இருக்கின்றது?

மக்களை பிரித்தும் பிளவுபடுத்தியும் ஆண்ட சட்டவிரோதமான ஆட்சிகள் மறுபக்கத்தில் ஊழல், லஞ்சம் மூலம் நாட்டை சூறையாடியதை சட்டம் தண்டித்திருக்கின்றதா?

ஊழலும் லஞ்சமும் அரசியலாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்ட பின்னணியில், நாட்டின் பொருளாதாரத்தை நவதாராளவாதம் மூலம் அன்னிய முதலாளிகளுக்கு தாரைவார்க்கின்ற பின்னணியில் சட்டம் யாருக்காக செயற்படுகின்றது?

மக்களுக்கு எதிராக, மனிதவுரிமைக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்படுவதும், மக்களை ஒடுக்க சட்டம் செயற்படுவதும் நடந்தேறுகின்றது. மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் விரோத சட்டங்களை இயற்றி இயங்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகள் சட்டத்துக்கு உட்பட மறுப்பதற்கும் எதிராகவும், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்க முடியாத வாழ்வியல் நெருக்கடியாகி இருக்கின்றது.

சட்டம் யாருக்கானது - அது மாற்றப்பட முடியாததா?

சட்டம் என்பது மாறாததுமல்ல, மாற்ற முடியாததுமல்ல. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் சட்டவாதம் பேசுகின்ற போது அதை மாற்ற முடியாத புனிதப் பொருளாகக் காட்ட முற்படுகின்றனர். உண்மை என்ன? பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றது. சட்டங்கள் மக்களுக்காக இயற்றப்படுவதில்லை என்பதே உண்மை. உலகமயமாதலுக்கு ஏற்ப மக்களை ஒடுக்க, புதிய சட்டங்கள் இயற்றப்படுதலே பாராளுமன்றத்தின் அன்றாட செயற்பாடாகும். உலகமயம் என்பது, மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளைப் பறித்தெடுத்தல் தான்.

சட்டம் அன்றாடம் மாற்றப்படுகின்றது. அது மக்களுக்கு எதிராக இயற்றப்படுகின்றது. இதற்கு எதிரான போராட்டமும், மனிவுரிமைகளை சட்டமாக இயற்றக்கோரிய போராட்டம் தான் மக்களுக்கான உண்மையான நேர்மையான அரசியல் நடைமுறையாக இருக்க முடியும்.

இந்த வகையில் மக்கள் போராட்டங்கள் ஜனநாயக கோரிக்கையாகவும், மனிதவுரிமையை கோரியதாகவும், இந்த சமூக அமைப்ப முன்வைக்கும் சட்டத்தின் ஆட்சியை மேல் இருந்து அமுல்படுத்தக் கோரியும், அதை கண்காணிக்கின்ற மக்கள் அமைப்பு முறையையும் முன்வைத்து போராடுவது தவிர்க்க முடியாததாகி இருக்கின்றது.