Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்கால் படுகொலையும், தொடரும் இனவாதமும்

 

இனவாதத்தை பேரினவாதிகள் மட்டும் கொண்டிருக்கவில்லை, பேரினவாதத்துக்கு எதிரானவர்களுக்குள்ளும் இனவாதமே தொடருகின்றது. இனவாதம் எங்கும் எப்போதும் மக்களுக்கு எதிரானது. முள்ளிவாய்க்கால், யூலைப் படுகொலை .. என அனைத்தையும் இனவாதம் ஊடாக அணுகி குறுக்கி விடுகின்ற இனவழிவுவாதமே, இன்று இலங்கையின் மைய அரசியலாகத் தொடருகின்றது.

கடந்த காலத்தில் எந்த இனவாதம் மக்களை முள்ளிவாய்க்காலில் பலியிட்டதோ, அந்த இனவாதம் அப்படியே மீண்டும் ஒரு புதிய பலிக்களத்தை தயாரிக்க முனைகின்றது. இந்த இனவாதத்தால் கொல்லப்பபட்டவர்கள் மக்கள். அவர்களுக்கு இன (மத, சாதி ..) அடையாளம் போட்டுக் காட்டுவதன் மூலம், மற்றைய இன (மத, சாதி ..) மக்களை எதிரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் எதிரியுடன் சேர வைக்கின்ற இன வக்கிரங்கள் தான், குறுகிய இனவாத அரசியலின் உள்ளடக்கமாக இருக்கின்றது.

நடந்த இனப் படுகொலைக்கு எதிராக அனைத்து இன மக்களையும் போராட வைக்காத அரசியல், சொந்த இன மக்களை மீண்டும் பலியிடுவது தான். இன்று தமிழ் தேசியத்தின் பெயரில் அரங்கேறுகின்ற எல்லாத் தரப்பு அரசியலும், மற்றைய இன மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. இதைத்தான் அரசும் செய்கின்றது.

பேரினவாத அரசு தன் இனவாதம் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களை தன்பின்னால் அணிதிரட்ட முனைகின்றது. இதற்கு உதவுபவர்களாகவே தமிழ்தேசியவாதிகள் உள்ளனர். அரசுக்கு எதிராக பெரும்பான்மை மக்களைப் போராடுமாறு முன்னெடுக்காத தமிழ் தேசிய அரசியல் என்பது இனவாதமாகும். 60 வருடத்துக்கு மேலாக தொடரும் இந்த இனவாதம் தான், தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் படுகுழியில் தள்ளிப் பலியிடுகின்றது.

இனப் படுகொலையை "பயங்கரவாதத்தின் மீதான வெற்றி" என்ற அரசின் பிரச்சாரத்துக்கு எதிராக, இல்லை இது தமிழினப் இனப்படுகொலை என்று கூறி சிங்கள மக்கள் போராடவேண்டும். இதை எமது போராட்டங்கள் உருவாக்கும் வண்ணம், எமது போராட்டங்கள் அணுகுமுறைகள் இருக்க வேண்டும். அப்போது மட்டும் தான், தமிழ் மக்களின் துயரங்களுக்கு விடுதலையும், நீதியும் கிடைக்கும்.

இதை விடுத்து அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பி, சொந்த இனவாதத்தைக் கொண்டு தண்டனை கோருவது என்பது கானல் நீராகும். முள்ளிவாய்க்கால் காலத்தில் பிணத்தை உற்பத்தி செய்து, அதைக் காட்டி இதுதான் தீர்வு என்று கூறிய அதே இனவாத மோசடியிலான அரசியலாகும். இது பேரினவாதத்துக்கு நிகரான, அதே இனவாத அரசியல்.

முள்ளிவாய்க்காலில் ஒரு பாரிய இனப்படுகொலை நடந்தது என்பதும், குற்றவாளிகளான பேரினவாதிகள் அதை வெற்றித் திருநாளாக காட்டுகின்றனர் என்பது மட்டும் ஒரு உண்மையல்ல. மறுதளத்தில் இந்தப் படுகொலைக்கு துணைநின்ற தமிழ் தேசியவாதிகளும், இதை தமிழ் மக்களின் துயரத்துக்குரிய நாளாகக் காட்டுகின்றனர் என்பதும் ஒரு உண்மை. மக்களுக்கு எதிரான குற்றத்தை மட்டுமல்ல, அதற்குரிய அரசியலைக் கொண்டும் செயல்படுகின்றனர் என்ற உண்மையை, நாம் இனங்ண்டு கொண்டு முறியடிக்க வேண்டும்.

மக்களின் துயரங்களை மக்களால் மட்டும் தான் உணரமுடியுமே ஒழிய, இனவாதிகளால் அல்ல. மக்கள் விரோத அரசியலால் அல்ல. யாரெல்லாம் இனவாதிகளாக இருக்கின்றனரோ, அவர்கள் மக்களின் அவலங்களை உணர முடியாது. மக்களின் துயரங்களை வைத்துப் பிழைப்பவர்கள் இவர்கள். இனவாதிகளின் துயரமாகட்டும், வெற்றியாகட்டும், மக்களைச் சொல்லி மக்களின் கழுத்தை அறுக்கும் அது இனவாதம் தான்.

முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தில் ஈடுபட்ட இனவாதிகள், மக்களை மந்தைகளாக பலிக்களம் வரை வளைத்துச் சென்றவர்கள். இங்கு இந்த இனவாதத்தில் தமிழ் - சிங்களம் என்ற வேறுபாடு கிடையாது. இறுதியில் கூட்டம் கூட்டமாக மக்களை கொல்லவும், அதை வைத்து பிண அரசியலை நடத்தியவர்களும் வேறு யாருமல்ல, இந்த இனவாதிகளே.

மக்களுக்கு எதிராக செயற்படுவதில் இந்த இனத் தேசியவாத அரசியல் ஒன்றுக்கொன்று நிகரானது. இது மக்களை பலி கொள்ளவும், பலி எடுக்கவும் தயங்காத மக்கள் விரோத அரசியல்.

இனவாதம் கடந்து அணிதிரண்டு போராடுவதன் மூலம் தான் இனவாதத்தை ஒழிக்க முடியும். இனக் குற்றங்களைத் தண்டிக்க முடியும். முள்ளிவாய்க்கால் படுகொலை, யூலைப் படுகொலை.... என அனைத்துக்கும் எதிராக, அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து போராடும் அரசியலை முன்னிலையில் வைத்து போராடுவதன் மூலம், மக்கள் தமக்காக தாமே போராடும் வரலாற்றை உருவாக்குவோம். இதை முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களின் மேல் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

பி.இரயாகரன்

19.05.2013