Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

நில அபகரிப்புக்கு எதிராக தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் நில அபகரிப்பு மற்றும் விரைவான மீள்குடியேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கில் இருந்து 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று கோரியும், நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் நில அபகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வாகனக் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

 

கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று தெல்லிப்பழை துர்கையம்மன் ஆலையத்தின் முன் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடியதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.

தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் அளிக்க, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முயன்ற போது அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றே பிரேதச செயலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், ஏனையோரை கலைந்து செல்லும்படி அரச அதிகாரிகள் வற்புறுத்தியுதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் எதிரொலியாகவே, வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்று கொண்டிருந்த போதே, புன்னாலைக் கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும், அவர்கள் பயணித்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இத்தாக்குதலை அடுத்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கழிவு எண்ணெயை ஊற்றும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.