Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போலி இடதுகளும் மாணவர் போராட்டத்தின் வளர்ச்சியும்

"சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட வன்முறை தமிழ் மாணவர்கள் மீதாக தொடருமானால், அன்று எப்படி மாணவர் சமூகம் அடக்குமுறையை உடைப்பதற்கு தள்ளப்பட்டார்களோ, அதே வழியில் எதிர்காலத்திலும் செயற்படுவதற்கு தயங்கமாட்டார்கள் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஆழமாக நம்புவார்கள் .

இக்கட்டமான நெருக்கடிக்குள்ளும் தங்கள் உயிருக்கு அஞ்சாமல் தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படும் அனைத்து மாணவர்களுடன் நாம் இருகரம் பற்றி அணைக்கும் நேரத்திலும் அவர்களுக்கு ஏற்படும் சிங்கள் அரசின் அச்சுறுத்தலை மற்றும் வன்முறையை நாம் வாழும் யேர்மன் அரசிடம் மற்றும் அரச கட்சிகளிடம் ஊடகத்திற்கும் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருகின்றோம் என்பதை இத்துடன் தெரிவிக்க விரும்புகின்றோம்."



மேற்க்கண்ட வசனம் புலம் பெயர் தேசங்களில் தன்னை முற்போக்காக காட்டும் இணையத்தில், இளையோர் அமைப்பு என்ற பெயரில் வெளிட்டுள்ள அறிக்கையில் இருந்து எடுத்த நறுக்கு ஆகும் .

இன்று அதி பயங்கர சூழலில் தள்ளப்பட்டுள்ள யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு ஆதரவு வழங்குகிறோம் என்ற போர்வையிலேயே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இளையோர் அமைப்புகள் என்ற பெயரில் புலம்பெயர்ந்த நாடுகளில் புலிபினாமிகள், யாழ்ப்பாணபல்கலை கழகத்தில் நடைபெறும் போராட்டங்களை "தமிழ் தேசிய" மயப்படுத்த முயல்கின்றார்கள். போராட்டங்களை புலிகளின் தொடர்ச்சியாக காட்ட முயல்கிறார்கள்.

இதற்கு சில, இடதுசாரிகள் என தம்மை அழைப்போரும் துணை போகிறார்கள். சரியான மக்கள் நலம் சார்ந்த அரசியலை, மக்களுடன் இணையாது, சுயமாக முன்னெடுப்பது மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பை தர போவதில்லை. மேற்படி போலி இடதுகள் மாணவர் போராட்டங்களை "தமிழ் தேசிய" மயப்படுத்த முயல்வது, அபாயகரமான நிலைக்கு மாணவர்களை தள்ளும் அரசியல் அடவாடித்தனம்.

ஆனாலும் தேசத்தில் யாழ்ப்பாண மாணவர்களுக்காக தென்னிலங்கை மாணவர்கள் குரல் கொடுப்பதும், இரு பகுதியும் இணைந்து போராட முயல்வதும் நல்லதொரு தொடக்கம்.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என கோரியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சில காலமாக பாதுகாப்புப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் பரமலிங்கம் தர்சாந்த் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் பாரதூரமாக தாக்கப்பட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-கலியுகவரதன் 21/05/2012