Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிவாசலுக்காக போராட்டம்இலங்கையில் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பெளத்த மத குழுவொன்றினால் தாக்குதலுக்குள்ளான பள்ளி வாசலுக்காக இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் கொழும்பு உட்பட நாட்டிலுள்ள ஜூம்மா பள்ளி வாசல்களில் விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன.

 

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வேண்டுகோளின் பேரில் வழமையான ஜூம்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் முன்றல்களில் நடைபெற்ற விசேட பிரார்த்தனையில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனைகளின் பின்பு அங்கு வருகை தந்த சிவில் அதிகாரிகளிடம் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதிக்கான மகஜர்கள் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

தம்புளை ஹைரியா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப் பள்ளிவாசலை வேறிடத்திற்கு இட மாற்றம் செய்யக் கூடாது போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியதாக ஜனாதிபதிக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம்

இந்த விவகாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் கைவிட்டு இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முஸ்லிம்கள் முன வர வேண்டும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் வேண்டுகொள் விடுத்திருந்தாலும் அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.

அம்பாறை மாவட்டம்ஆர்ப்பாட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்து கொண்ட முஸ்லிம்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது தாம் காட்டிய விசுவாசத்தையும், முஸ்லிம் நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவு வழங்கியதையும் சுட்டிக் காட்டத் தவறி விடவில்லை.

இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் காரணமாக ஜூம்மா தொழுகை தடைப்பட்ட தமது பள்ளிவாசலில் இன்று வழமை போல் தொழுகை நடைபெற்றதாக தம்புளை ஹைரியா பள்ளிவாதல் நிர்வாகத்தைச் சேர்ந்த ஹரிஸ் எம். யாசின் கூறுகின்றார்.

மேலும் இன்று வழமை நாட்களை விட முஸ்லிம் பிரதேசங்களில் கலகம் அடக்கும் பொலிசார் உட்பட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.