Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

விசாரிக்கப்பட வேண்டியவர்கள் யார்??

தொழிற்கட்சியின் முன்னாள் தலைவரும், பிரதம மந்திரியாகவும் WHO  (ஜ நா வின் உலக சுகாதார நிறுவனம் ) இன் தலைமைப் பதவி வகித்தவருமான குறூ கார்லெம் புறுந்லாண்ட் என்ற, நோர்வேஜிய தொழிற்கட்சியின் ஊடான பிரபலமும் செல்வாக்கும் அரசியல் ஆளுமையும் மிக்க இந்தப் பெண் அரசியல்வாதியின் கழுத்தைத் துண்டித்துக் கொலை செய்து, அப்படுகொலையை அல்கைதா பாணியில்   வீடியோப் பதிவு செய்து பரப்புவது தனது மிகுந்த இலக்குகளில் ஒன்றாகவிருந்தது என்று தனது சாட்சியத்தில் கம்பீரத்துடனும் பெருமையுடனும், இறுமாப்பான புன்னகையுடன் தனது திட்டங்கள் பற்றி பதிலளித்தான் அன்டர்ஸ் ப்ரைவிக்.

அமைச்சு அலுவலக மாடிக்கட்டிடத் தொகுதியை முழுவதுமாகத் தூள் தூளாகத் தகர்த்து கட்டிடம் வீழ்ந்து நொறுங்கும் போது அமைச்சு அதிகாரிகள் ஊழியர்களுக்கு முடியுமான உயிர்ச்சேதங்களை உருவாக்குவதற்காகவே தனது குண்டு அதற்கேற்ற சக்திவாய்ந்ததாக தயாரிக்கப்பட்டு அங்கு எடுத்துச் செல்லப்பட்டு வெடிக்கவைக்கப்பட்டது. ஆனால் தனது திட்டத்திற்கும் தயாரிப்புக்கும் அமைய அது நிகழாமல் குறைந்தளவு உயிரிழப்புக்களையே குண்டுவெடிப்பு ஏற்படுத்தியது எனவும் தனது திட்டத்தின் முழு வீச்சும் நடந்தேகவில்லை எனவும் வருத்தப்படுபவனாக அவன் பேசுகிறான்.

குடிவரவுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிரான நிறவாதக் கட்சி ( FRP ) பாராளுமன்ற ஜனநாயக பாதையினூடாகப் பதவிக்கு வந்து நோர்வேயின் ஆட்சியைக் கைப்பற்றி, அதன் கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் போனதால் அவ்வழி சரிப்படாமல் போனதால்தான் அதற்குப் பதிலாக தனது வன்முறை வழியை தான் தேர்ந்தெடுத்ததாகவும் கூறுகிறான் இன்றைய தனது விளக்கத்தில்.


தனது கொள்கைகள் எந்த கட்சியில் இருந்து கிளைவிட்டன என அவன் கூறிய பின்பும், தனக்குள் இந்தக் கொடிய விலங்கை உருவாக்கிய கொள்கையின் பிறப்பிடம் எதுவென இந்த வாக்குமூலத்தில் அவனே குறிப்பிட்ட பின்னாலும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் யார் அவன் மட்டுமா? அவன் யாரின் எந்தக் கொள்கைகளின் பிரதிநிதி? இஸ்லாமியக் குரோத நிறவெறிக் கொள்கைகளை பரப்பும் கட்சிகளின் தலைமைகள் அல்லவா அவனது ஊற்றுக்கள்.