Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

பல்கலைக்கழக மாணவி பவுஜியாவை சமூகம் தற்கொலை செய்வித்திருக்கிறது

யுத்தத்தின் போது தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்து படுகாயமுற்ற நிலையில் தனித்துப்போன முன்னாள் போராளியான பவுஜியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டே யாழ்பல்கலைக்கழக விடுதியில் இருந்து கல்வி பயின்றுள்ளார்.

 

உறவினர்களை இழந்து தனிமரமாக நின்ற இவர் உளவியல் ரீதியாக மிகவும் கடுமையாக பாதிகப்பட்ட நிலையில் இருந்ததாக சக மாணவிகள் கூறுகின்றனர். எப்பொழுதும் சக மாணவிகளின் ஆதரவை தேடுவதாகவும் அவர்களுடன் இருப்பதை பாதுகாப்பாகவும் ஆறுதலாகவும் கொண்டு பவுஜியா கல்வி கற்றதாக விடுதி மாணவிகள் தெரிவிக்கின்றனர். எப்பொழுதும் நிர்க்கதி வாழ்க்கையை நினைத்தும் உறவுகளை நினைத்தும் அழுது கொண்டிருந்த பவுஜியாவுக்கு விடுதி மாணவிகளின் ஆதரவு ஒன்றே பெரிய உந்துதலாக இருந்துள்ளது.


ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் முதல் மற்றும் இறுதியாண்டினர் மாத்திரமே விடுதியில் தங்கமுடியுமென கூறியுள்ளது.


தன்னால் வெளியில் அறையில் தங்க முடியாது என்றும் விடுதியில் தனக்கு இடம் வழங்கி உதவும் படியும் மாணவி பவுஜியா பல்கலைக்கழக நலச்சேவை உதவிப் பதிவாளரிடம் பலமுறை கடிதங்களை எழுதிக் கேட்டிருக்கிறார். நலச்சேவை அதிகாரியோ அறைக்கான வாடகையை தருகிறோம் என்று கூறி மாணவியின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.


சக மாணவிகளின் ஆதரவும் அமைதியான விடுதிச் சூழலிலும் இல்லாமல் தனிமையில் வாடிய மாணவி பவுஜியாவை உறவினர்களின் வெறுப்பும் பாதித்த வேளையில் தற்கொலை முடிவுக்குச் சென்றிருக்கிறார் எனத்தெரியவருகிறது.


அபிவிருத்தி செய்யும் அரசும் அதைப் பார்வையிட வரும் இந்திய அரசும் வடக்கில் வசந்தம் வீசுவதாகச் சொல்லட்டும். கூட்டமைப்புக்கு வசந்தமா சூறாவளியா என்பது தேர்தல் காலத்தில் மடடும்தான் தெரியவருகிறது.


ஆனால் தமிழ் சமூகம்....? கொடிய யுத்தம் விட்டுச்சென்ற தொடருகின்ற உளவியல் யுத்தம் அதைவிடக் கொடூரமாய் இருக்கிறது.

--முரளி 19/04/2012