Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கோவணமும் இல்லாநிலையில், தமிழ் ஈழக்கனவில் மிதக்கவிடும் மக்கள் விரோதிகள்

"பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால், கட்டி இருக்கும் கோவணமும்  களவாடப்படும்" என்றது போல, இப்போ கோவணமும் பறிக்கப்பட்ட தமிழினத்துக்கு, இந்தியாவையும் அமெரிக்காவையும்   உதவியாக கொண்டு "ரமில் ஈழம்" பெற்று தருவதாக புலுட்டா விடுவதில் புலன்பெயர் புலிப்பினாமிகள் மிக திறமையானவர்கள். திறைமை இருந்தும் இலங்கையில் பினாமி வேலை செய்யும் சில சக்திகள் நேரடியாக "ரமில் ஈழ" புலுட்டாவை விட முடியாமல் மறைமுகமாக அதை செய்கிறார்கள்.

 

கீழ்வரும் செய்தி மேற்படி புலுடாவுக்கு ஒரு உதாரணம். மக்களை ஏமாற்றி நிதி நிறுவனத்தின் ஊடாக கொள்ளையடித்த TNA சரவணபவனின் கைத்தடியான உதயன் பத்திரிகையின் செய்தி இது .
 
இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின் பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
 
காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.


ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார். அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின் உயர்மட்டப்பிரமுகர்களுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறும் இந்தச்சந்திப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.


அமைச்சரின் இந்தக் கோரிக்கை உடனடியாக இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டது. என்றாலும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லையென நம்பகரமாக அறிய முடிந்தது. இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த இந்தியா, அந்தத் தலைவர்கள் வழங்கி வந்த ஆக்கபூர்வமான உறுதி மொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் அவர்களை உடனடியாக சந்திப்பதைத் தவிர்த்து விட்டதாக இந்தியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர்  தெரிவித்தார்.
 
இதற்கிடையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் மாற்றம் கொழும்பு அரசியலில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஜெனிவா மாநாட்டிற்குப் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பும் இதன் பின்னணியில் மேலும் மோசமடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது."
 
இப்படியான  புலுடாக்கள் தான் எண்பதுகளில் விடப்பட்டது. இந்தியா வந்து என்ன செய்தது?. இன்றுள்ள நிலையில் அது இங்கு வரப்போவேதும் இல்லை, தனது நலனுக்கு மாறாக   எதுவும் செய்ய போவதும் இல்லை . இலங்கை அரசுடன் முரண்படுவதென்பது தமிழ் மக்களில் விடுதலைக்கு வழிவகுக்கும் என கனவு காண வைப்பது, கோவணம் இல்லா நிலையிலும்  பட்டு வேட்டிக்கா கனவு  காணும் படி மக்களை ஏமாற்றுவதாகும். மக்கள் போராட்டம் இல்லாமல் எதுவும் வரபோவதில்லை .

--கார்த்திகேசு கலியுகவரதன்  31/03/2012