Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிப்பினாமிகளின் கிளுகிளுப்பும், முன்னாள் போராளிகளின் அவலமும்

புலிகள் இயக்கம் உயிருடன் இருக்கும் போது அவர்களின் ஒவ்வொரு தாக்குதல்களையும், சமாதான ஒப்பந்தக்காலத்தில் பிஸ்டல் குழுவின் வீரசாகசங்களையும் (தனிமனித படுகொலைகள்) எவ்வாறு புலம்பெயர் பினாமி ஊடகங்கள் கொண்டாடின என உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இறுதிப் போர்க்காலத்தில் தலைவர் "உள்ளவிட்டு அடிப்பார்" பாருக்கோ என்று புளகாங்கிதம் கொண்டார்கள்.

 

இப்போ மே 18 இக்கு பின் அடக்கி வாசித்த பினாமிகள், காலங்கடந்தாலும்  கீழ் வரும் செய்தியை, இப்போ தமது ஊடகங்களில் வெளியிட்டு மறுபடியும் தமது பழைய கிளுகிளுப்பை மீட்டி பார்க்கின்றனர் .

"இலங்கை விமானப்படையினருக்கு சொந்தமான உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை, ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகளை கொண்டே விடுதலைப்புலிகள் அழித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகள் விமானப்படைக்கு சொந்தமான சுமார் 8 விமானங்களை அழித்துள்ளனர்.

இந்த ஏவுகணையை பயன்படுத்தியே, 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் தற்போது, கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணையின் வெற்றுத்தோட்டாவினை பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி எண்டனோவ் விமானத்தை தாக்கிய இரண்டு சந்தேக நபர்களை கடந்த 26ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர். இவர்கள் மேலும் இரண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், வில்பத்து வனத்தில் மறைத்திருந்து இவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்தாக கூறப்படும் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான கடாபி என்பவர், திறமையாக துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடியவர் எனவும் சுவற்றில் துப்பாக்கியால் சுட்டு தனது பெயரை தோட்டக்களில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரே விமானப்படையினருக்கு சொந்தமான விமானங்கள் பலவற்றை வீழ்த்தியுள்ளார்.

எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதலினால், விழுந்து நொருங்கிய பல விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக விமானப்படையினர் எண்ணி வந்துள்ளனர். போர் முடிவடைந்த பின்னர், புலிகளின் பதுங்குகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஏவுகணைகளின் வெற்று தோட்டக்கள், தாக்குதல் மூலமே விமானங்கள் வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தன."

இந்த பினாமிகளின் கிளுகிளுப்பு ஒருபுறமிருக்க, மேற்படி செய்தியின் பின்னல் இருப்பது பாசிச இலங்கை அரசின் உளவு நிருவனங்களென இலங்கையின் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் தெரிவிகின்றன. மேற்படி விமான தாக்குதல்களை, குறிப்பாக சிவில் விமானைத்தை தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளதானது, புலிகளை மேலும் மேலும் சர்வதேச அரங்கில் பயங்கரவாதிகளாக காட்டுவதற்காகவே.

சிவில் விமானங்களை தாக்குவது சர்வதேச குற்றமாகும். மேற்படி விமான தாக்குதல் வழக்குகாளால் நேரடியாக பாதிக்கப்பட போவது கைது பண்ணபட்ட முன்னாள் போராளிகளும், அவர்களின் பிள்ளைகளும், குடும்பமுமேயாகும். இறுதி யுத்த   காலத்தில் மக்களின் அவலத்தை அதிகரித்து, அதை உலகுக்கு காட்டி "ரமில் எலாம்" காண முயன்ற இந்த புலம் பெயர் பினாமி மாபியா கும்பல், ஒரு சாதாரண போராளியின் அவலத்தை கணக்கில் எடுப்பார்கள் என நம்புவது முட்டாள்தனம். பாசிச மகிந்தாவின் அரசியல் இருப்பும், புலிபினாமிகளின் அரசியல் இருப்பும் மக்களின் அவலதிலேயும், அவர்களை ஒடுக்குவதிலேயுமே தங்கியுள்ளது.  

--கார்த்திகேசு கலியுகவரதன்  30/03/2012