Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களை ஏமாற்ற போடும் திருகுதாளங்கள்

தமிழ்ழீழ அரசியலில் துரோகிகள் பட்டம் வழங்கப்படுவது போல சிங்கள பகுதியிலும் இது வளமயானதொன்று. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல, நொந்து நூலாக போய்கொண்டிருக்கும் கட்சி தான் மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபி (JVP). அண்மைக் காலத்தில்  ஜேவிபி இக்கு முதல் ஆப்பு வாய்த்த பெருமை, மஹிந்த பாசிச அரசின் சர்வதேச அரசியலுக்கு சார்பாக, "ஏகாதிபத்திய எதிர்ப்பு" ஸ்ரண்ட் வித்தை காட்டும் விமல் வீரவன்சையே சாரும்.

கலைஞர் கருணாநிதி ஸ்டையிலில் உண்ணாவிரதம் இருப்பது, தேவை என்றால் இந்தியாவுக்கெதிராக அறிக்கை விடுவது, நோர்வேயையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் இலங்கை அரசியலில் தலையிடக் கூடாதெனவும், தலையிட்டால் பாரிய விளைவை அந்நாடுகள் சந்திக்க வேணுமெனவும்  வாய்சவடால் விடுவதும் வீரவன்சையின் சமீபகால அரசியல் ஸ்ரண்ட்டுகள்.

ஜெனிவாவில் நடந்த அமெரிக்க தலைமையிலான "இலங்கைக்கெதிரான" மனிதஉரிமை மீறல் வாக்கெடுப்பின் பின், இந்த கோமாளி இப்போ அமெரிக்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மஹிந்த வீட்டு அரசியல் நாய்குட்டியான வீரவன்ச இலங்கை மக்களை, அமெரிக்க பொருட்களை பாவிக்க வேண்டாமென பிரச்சாரம் செய்வதுடன் போராட்டமும் நடத்துகிறார்.

மக்கள்    அன்றாட வாழ்வில் உபயோகிக்கும், அமெரிக்க பாவனைப் பொருட்களை பாவிக்க கூடாது என்பதில், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் அடிப்படையில் எமக்கு எந்தவித முரண்பாடுமில்லை.

பிரச்சினை என்னவென்றால் இவர் போராட்டம் நடத்துவது மக்கள் அன்றாடம் பாவிக்கும் அமெரிக்க பாவனைப் பொருட்களுக்கு எதிராகவே. மஹிந்த பாசிச அரசு அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யும் வெடி குண்டுகளுக்கும், இராணுவ உபகரணங்களுக்கு எதிராகவல்ல .

இந்த கோமாளி இன்று மஹிந்த பாசிச அரசில் ஒரு மந்திரி. இவர் அமெரிக்க பொருட்களை பாவிக்க வேண்டாமென மக்களை கேட்க வேண்டுமென்பதில்லை. தனது எசமான் அதிஉயர் மகிந்தவிடம் சொல்லி அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதித்தடை விதித்தாலே போதும். அதை விடுத்து இந்த பிரகஸ்பதி போடும் நாடகங்கள் "இந்தா பார் அமெரிக்கா வருகுது, இந்தியாவோட சேர்ந்து "ரமில் எலாம்" பெற்று தருகுது" என பீலா விடும் புலிப்பினாமிகளின் தெருக்கூத்து போல ரசிக்கத்தக்கதல்ல. எல்லாம் மக்களை ஏமாற்ற போடும் திருகுதாளங்கள் .

--கலியுகவரதன் காத்திகேசு 26/03/2012