Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

ராஜபக்ஷவுக்கு மன்மோகன் சிங் கடிதம்

இலங்கைக்கு எதிராக ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், சம நிலையைக் கொண்டுவர இந்தியா முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றதாக, இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.

 

மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, இப்போது முதல் முறையாக தனது நிலைப்பாட்டுக்கான காரணம் குறித்து, இலங்கை அரசுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.

கடந்த 19-ம் தேதி இலங்கை ஜனாதிபதி எழுதிய கடித்தத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங் இந்தக் கடித்தத்தை எழுதியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தைப் பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புக்களுக்கு ஏதுவாக, மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின்போது, இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் உள்ள வாசகங்களில், சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா முயற்சி எடுத்ததையும், அதில் வெற்றி பெற்றதையும் நீங்கள் அறிவீர்கள் என்று தனது கடித்தில் இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில், இந்திய அரசும் மக்களும் இலங்கையின் பக்கம் உறுதியுடன் நின்றதாக மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட நீண்ட மோதல்கள் கடந்த 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது, நியாயமான தேசிய நல்லிணக்கத்துக்கும், இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கும் வழிவகுத்துக் கொடுத்ததாகக் கூறியுள்ள மன்மோகன் சிங், அதில் கணிசமான முன்னேற்றமும் கண்டுள்ளதாக இலங்கையைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முனைந்துள்ள ஜனாதிபதியின் நோக்கத்தையும் பாராட்டுவதாக மன்மோமன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதியை இந்தியப பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.