Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

 

தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக வந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார்.

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்ககூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியைத் தோற்கடிக்க முடியும்.

ஆகவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொக்ககோலா, கோதுமை மா உட்பட எது எது அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் என மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்டன.