Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

"இலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்"

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும்,

பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது.

ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது.

இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.

இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடைய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றன. இனமோதலின் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்ட, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடபிராந்தியம் தொடர்ந்தும் இலங்கை ராணுவத்தின் மறைமுக ஆட்சியின் கீழ் இயங்குவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பில் இருக்கும் சிங்கள அதிகாரிகளே முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறும் ஐசிஜி, படிப்படியாக இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்கள், நாட்டின் வடபகுதியில் அரச உதவியுடன் குடியேற்றப்படுவதாகவும், இப்படியான சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் வடபகுதி தமிழர்கள் மத்தியில் நிலவிய பழைய மனக்குறைகளை மீண்டும் தூண்டுவதாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் அரசின் இந்த போக்கு தமிழர்கள் உள்ளிட்ட மற்ற சிறுபான்மையினர் மத்தியில் உண்மையான மீள்குடியேற்றத்திற்கான வாய்ப்புகளை பலவீனப்படுத்துவதாகவும் ஐசிஜி அமைப்பு கூறுகிறது.

அரச உதவியுடன் நடக்கும்'சிங்களமயமாக்கல்'

ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் நாட்டின் வடபகுதியில் நிலை கொண்டிருப்பது பலவகையான சிங்களமயமாக்கலுக்கு வழிவகுப்பதாக கூறும் ஐசிஜி அமைப்பு, தெருப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றுவதில் துவங்கி, சிங்கள போர் வீர்ர்களுக்கான நினைவிடங்கள் கட்டுவது, தமிழ் பேசும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அளிக்கப்படாத தனி சலுகைகளை சிங்களம் பேசும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அளிப்பது, ராணுவம் மற்றும் அரசின் ஒத்துழைப்போடு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களில் சிங்களர்கள் குடியமர்வது விவசாயம் செய்வது போன்ற செயல்கள் தங்களுக்கு பெரும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இலங்கையின் கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த நிலைமை படிப்படியாக மாறி இன்று பல்லின மக்களும் வாழும் சூழல் உருவாகியிருப்பதை போல, வடக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் யதார்த்த களநிலவரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு அதிபரின் ஆதர்வாளர்கள் ஆலோசகர்களின் ஆதரவு இருப்பதாகவும் ஐசிஜி கூறியுள்ளது.

வடபகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் ராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள், அந்த பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வருவதாகவும் இந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'தமிழர்களின் கவலைகள் தீர்க்கப்படவில்லை'

விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பது என்கிற நியாயமான தேவைக்காகவே ராணுவம் அங்கே இருப்பதாக கூறப்பட்டாலும், இத்தகைய தேவைக்கதிகமான ராணுவமயமாக்கல் அந்த பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் பயத்தையும் கோபத்தையும் அதிகரித்துவருவதாக கூறும் ஐசிஜி அமைப்பு, இலங்கை அரசின் இந்த உத்திகள், எந்த தமிழர்களின் வன்முறை கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த கிளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் முடியக்கூடும் என்றும் ஐசிஜி அமைப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச சமூகம் என்ன செய்யவேண்டும்

இந்திய அமெரிக்க அரசுகளின் நிர்பந்தங்களையும் மீறி நாட்டின் மாகாணங்களுக்கு மேலதிக அதிகாரங்களை அளிப்பதில் இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதோடு, ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்தாமல் தவிர்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த பின்னணியில், சர்வதேச சமூகம் தற்போது தடைப்பட்டிருக்கும் இலங்கை அரசுக்க்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சபேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு உதவ வேண்டும் என்றும் இன்றைய அறிக்கை கோரிக்கை விடுக்கின்றது.

வடபிராந்தியத்தில் இருக்கும் ராணுவத்தை அகற்றுவது, ராணுவ ஆட்சிக்கு பதிலாக முழுமையான சிவில் நிர்வாகத்தை அனுமதிப்பது, ஜனநாயக தேர்தல்களை நடத்துவது, அரசு உதவியுடன் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவது ஆகியவை உடனடியாக செய்யப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

இலங்கை அரசே நியமித்த கற்றறிந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ள ஐசிஜி அமைப்பு, இது தொடர்பில் இலங்கையில் செயற்படும் ஐ நா உள்ளிட்ட சர்வதேச தொண்டு அமைப்புக்களும், இலங்கையின் கொடையாளி நாடுகளும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

தங்களின் சேவைகள் மற்றும் நிதிஉதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்றும் ஐசிஜி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.